தமிழகம்

நிர்பயா திட்ட நிதி மூலம் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.33 கோடி செலவில் 5,600 தெரு விளக்குகள்

செய்திப்பிரிவு

சென்னை: பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா திட்ட நிதியில் இருந்து சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.33.57 கோடியில் 5,594 புதிய தெரு விளக்குகள், 85 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சியடைந்த, போதிய வெளிச்சம் இல்லாத, இருள் சூழ்ந்த பகுதிகளில், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயாதிட்டத்தின் கீழ் புதிய மின்விளக்குகள்அமைக்கப்படும் என்று 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.

அதன்படி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4.82 கோடியில் 1,104 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மாநகரில் பாதுகாப்பு கருதி மின்விளக்குகள் அமைக்குமாறு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள இடங்களில் 696 தெரு விளக்குகள், 49 உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி ரூ.6 கோடியில் நடந்து வருகிறது.

இதேபோல, மாநகராட்சி மின்துறை மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 3,794 தெரு விளக்குகள், 36 உயர் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி, நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.22.73 கோடியில் நடந்து வருகிறது.

மிகவும் துருப்பிடித்த, உயரம் குறைவான 1,997 தெரு விளக்கு மின்கம்பங்களை மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ்ரூ.7.53 கோடியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மாநகராட்சி முழுவதும் மொத்தம் ரூ.33.57 கோடியில் 5,594 புதியதெரு விளக்குகள், 85 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT