சென்னை: சென்னையில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை விநியோகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பெட்ரோல் நிலையங்களில் நேற்று முன்தினம் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. 'டீசல் இருப்பு இல்லை' என அந்த பெட்ரோல் நிலையங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், சென்னையில் 2-வது நாளாக நேற்று டீசல் மட்டுமின்றி பெட்ரோலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா சாலை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பாரத்பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால், மேற்கண்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் 'பெட்ரோல், டீசல் இல்லை' என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
இதே நிலை நீடித்தால், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களின் சேவை முடக்கப்பட்டு, பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிகிறது.