சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘சாராஸ் மேளா’ கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் பெற்றுத் தர நடவடிக்கை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் சாராஸ் மேளாவை நேற்றுதொடங்கி வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், 75-வதுசுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அமுதப் பெருவிழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது: கிராமம் முதல் நகரம் வரை சீரான வளர்ச்சி பெறவே கடந்த 1989-ம் ஆண்டு மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

முதல்வரிடம் பாராட்டு

அவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறியிருந்தார். அதையும் தாண்டி ரூ.21,360 கோடி கடன் வாங்கிக் கொடுத்து முதல்வரிடம் பாராட்டு பெற்றோம்.

இந்த ஆண்டும் ரூ.25 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த இலக்கையும் தாண்டி அதிக கடன் பெற்றுக் கொடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

நிகழ்வில், ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பெ.அமுதா, சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் ச.திவ்யதர்சினி, செயல் இயக்குநர் பா.பிரியா பங்கஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செப்.18 வரை சாராஸ் மேளா

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 'சாராஸ் மேளா' எனப்படும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி சென்னை, கலைவாணர் அரங்கு வளாகத்தில் செப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு அமைக்கப்பட்ட 107 அரங்குகளில் தமிழகம் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புற கைவினைஞர்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இரவு 8 மணி வரை கண்காட்சி

இதில் நவராத்திரியையொட்டி கொலு பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன. நாள்தோறும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT