கன்னியாகுமரியில் இருந்து இன்று நடைபயணத்தை தொடங்கும் ராகுல்காந்தி எம்.பி. இன்று முதல் 10-ம் தேதி வரை 4 நாட்கள் முகாமிட்டிருப்பதால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொண்டர்கள் அதிகமுள்ள மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. இங்குள்ள மக்கள் காமராஜர் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு பல வெற்றிகளைக் கொடுத்துள்ளனர்.
நாகர்கோவில் எம்.பி. தொகுதியும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் குளச்சல், கிள்ளியூர்,விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளும் காங்கிரஸ் வசம் உள்ளன. காங்கிரஸ் தொண்டர்கள் குமரி மாவட்டத்தில் அதிகமானோர் உள்ள நிலையில், ராகுல்காந்தியின் 4 நாள் நடைபயணம் காங்கிரஸாருக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களில் காங்கிரஸ் கொடிகள், சுவர் விளம்பரங்கள் நேற்று பரவலாக அமைக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கன்னியாகுமரியில் திரண்டுள்ளனர். இதனால் சுற்றுலா மையமான கன்னியாகுமரி மேலும் களைகட்டியுள்ளது.
வர்த்தகம் அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மட்டுமின்றி நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், களியக்காவிளை என முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளும் நிரம்பியுள்ளன. கன்னியாகுமரி ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை கடந்த இரு நாட்களாக கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆட்டோ முதல் வாடகை வேன், கார்களும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. வாகனங்கள் வரத்து அதிகமானதால் நாகர்கோவில் - கன்னியாகுமரி வழித்தடத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.