சென்னை: தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள், அநீதிகள் தொடர்பாக புகார்களை விசாரித்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று, 60 வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மக்கள் மீதான வன்முறை, தாக்குதல்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன.
போக்குவரத்துத் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பொறுப்பு வகித்தபோது, அரசு அதிகாரியை ஜாதிப் பெயரைக் கூறித் திட்டியதாக கூறப்படும் விவகாரத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என தாட்கோ இயக்குநர் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பிலிருந்து வெளியேறுகின்றனர். மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டால், அது போலியாகும். இவ்வாறு போலிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்ல தனி பாதை உள்ளது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அருண் ஹல்தார் கூறினார்.