தமிழகம்

நவீன தொழில்நுட்பம் வந்த பிறகும் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டுவது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

மதுரை: மரங்களை வேருடன் எடுத்து வேறு இடத்தில் நடுவதற்கான தொழில்நுட்பம் உள்ளபோது சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்டுவது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இப்பணிக்காக இந்தச் சாலையில் இரு பக்கங்களிலும் வளர்ந்துள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த மரங்கள் 40 ஆண்டுகள் பழமையானவை.

திருவனைக்கோயில் - சுங்கச்சாவடி சாலை 70 அடி அகலம் கொண்டது. அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட வேண்டிய தேவையில்லை. எனவே, மரங்களை வெட்டுவதை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. திருவனைக்கோயில் - சுங்கச்சாவடி சாலையில் மரங்கள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறுகையில், மரங்களை வேரோடு ஓரிடத்திலிருந்து எடுத்து மற்றொரு இடத்தில் நடுவதற்கு தொழில்நுட்பம் இருக்கும்போது மரத்தை வெட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT