விழுப்புரம்: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் காணாமல் போன முக்கிய ஆவணங்களின் நகல்கள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு, அப்போதையை முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த பெண் எஸ்.பி.க்கு தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெண் எஸ்.பி.யின் புகாரைத் தொடர்ந்து, முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு கடந்த மாதம் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ் அப் மெசேஜ் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உட்பட, வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் சேர்க்கப்பட்டிருந்த 3 முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டுபிடித்த நடுவர் புஷ்பராணி, மாயமான ஆவணங்களை கண்டுபிடித்து அடுத்த வழக்கு விசாரணைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாயமான ஆவணங்கள் தொடர்பாக நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதோடு, ஆவணங்கள் மாயமானது தொடர்பான தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு தெரிவிக்க உத்தரவிட்டார்.
மேலும், மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை நடுவர் மன்றத்தில் சமர்ப்பிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாயமான 3 முக்கிய ஆவணங்களின் நகல்களை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து நேரில் ஆஜரான 4 சாட்சியங்களிடம் விசாரணை நடத்திய நடுவர், வழக்கின் விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.