சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு கவுன்ட்டர்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், சொத்துவரி சீராய்வை மேற்கொள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துகள் முறையாக பரிசீலிக்கப்பட்டன.
பின்னர்மன்றத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள இனங்களின் அடிப்படையில், 2022-23-ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு முதலே சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, சொத்துவரி பொதுசீராய்வு அறிவிப்புகள் அஞ்சல்துறை மூலமாக, சொத்து உரிமையாளர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதுவரை 11 லட்சத்து 58 ஆயிரத்து 79 சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி சீராய்வுஅறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பொது சொத்துவரி சீராய்வின் தொடர்ச்சியாக இதுவரை 5 லட்சத்து 75 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் ரூ.472 கோடியே 88 லட்சம் வரியை செலுத்தியுள்ளனர்.
தற்போது, சொத்து வரிபொது சீராய்வின்படி, குறிப்பிட்ட தெருவுக்கு சதுர அடி அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி விவரம் அறிய, மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/citizenCalc.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரி விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும், சொத்து வரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி தொடர்பாக எழும்சந்தேகங்கள் மற்றும் கணக்கீட்டு விவரம் குறித்து தெளிவு பெற, மாநகராட்சியின் அனைத்துமண்டலங்களிலும் தனி கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி தொடர்பான, சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம் ஆகியவை குறித்து தெளிவுபெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.