தமிழகம்

பரந்தூர் விவசாயிகள் பிரச்சினையை முதல்வர் கேட்காவிட்டால் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள ஏகனாபுரம் விவசாயிகளின் பிரச்சினைகளை முதல்வர் கேட்காவிட்டால் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரந்தூர் விமான நிலையம் அமையும் இடத்தில் 1,350 ஏக்கர் பகுதி நீர்நிலை புறம்போக்கு நிலங்களாக உள்ளது. இங்கு விமானநிலையம் அமைத்தால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரை அனுப்பும் 72 ஏரிகளின் உபரிநீர் இணைப்பு கால்வாய்கள் அழியும். இதன் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியின் ஆதாரம் பாதிக்கப்படும். இங்கு விமான நிலையம்அமைப்பது நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.

இத்திட்டத்தை எதிர்க்கும் ஏகனாபுரம் மக்கள் போலீஸாரால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இது முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா என அறிய விரும்புகிறேன். இம்மக்களை முதல்வர் ஸ்டாலின் மீக்க வேண்டும். அவர்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும். கேட்காவிட்டால் தீவிர போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும்.

பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் அமைந்துள்ளது. அங்கு 1,000-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வீடுகளை கட்டி, விவசாயம் செய்து வருகின்றன.

இத்திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களை சந்திப்பதற்காக நேற்று(செப்.4) ஏகனாபுரம் நோக்கி சென்றோம். எங்களை போலீஸார் கைது செய்தனர் என்றார்.

SCROLL FOR NEXT