சென்னை: சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை விநியோகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பெட்ரோல் பங்க்குகளில் நேற்று டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல் இருப்பு இல்லையெனஅந்த பெட்ரோல் பங்க்குகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி கூறும்போது, “டீலர்களுக்கு தினசரி தேவைப்படும் பெட்ரோல், டீசலை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்யும்.
ஆனால், கடந்த 2 தினங்களாக டீலர்கள் கேட்கும் அளவுக்கு டீசல் விநியோகம் செய்யாமல் குறைத்து விநியோகம் செய்யப்படுகிறது இதனால்,டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்டால், முறையான பதில் தெரிவிப்பதில்லை” என்றார்.கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, நஷ்டம் அதிகரித்துள்ளதால் டீசல் விநியோகத்தை குறைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.