ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலையில் தொடங்கி இரவு வரை மழையும் பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் பகலில் வெயில் வாட்டிய நிலையில், இரவு 8 மணியளவில் சாரலாக மழை தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஈரோடு பேருந்து நிலையம், முனிசிபல் காலனி, சம்பத்நகர், பெரியவலசு, பெருந்துறை சாலை, சத்தியமங்கலம் சாலை, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியது.
ஈரோடு சத்யா நகரில் 50 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட மடிக்காரர் காலனியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும், இப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால், சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியது.
இதேபோல, அம்மாப்பேட்டை, கொடுமுடி, பவானிசாகர், கோபி, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. அம்மாப்பேட்டையில் அதிகபட்சமாக 92 மிமீ மழை பதிவானது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: பெருந்துறை, கோபியில் தலா 40, பவானிசாகர் 30, மொடக்குறிச்சி, பவானி 29, கொடுமுடி 25, தாளவாடி 24, கொடிவேரி 23, கவுந்தப்பாடி 19, ஈரோடு 14, குண்டேரிப்பள்ளம், சத்தியமங்கலம் 12 மிமீ மழை பதிவானது.