தமிழகம்

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமின்மையை சுட்டிக் காட்டியும், நிர்வாகத்தில் ஒழுங்கற்ற நிலை இருப்பதாகவும் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசில் ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் செயல்படத் தொடங்கியுள்ளது.

மேலும், எஞ்சிய விடுதலைப்புலிகள் மற்றும் நக்சலைட்டுகள் ஆதரவு இயக்கங்கள் தலைதூக்கியுள்ளன. அதாவது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிடப்படுகிறது.

எனவே, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் அரசியல்சாசனச் சட்டப்பிரிவு 356-ஐ அமல்படுத்தி (குடியரசுத் தலைவர் ஆட்சி) சட்டப்பேரவையை முடக்கி வைக்க வேண்டும். மேலும் தெற்கு மாவட்டங்களிலும் சென்னையிலும் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை 6 மாதங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வலியுறுத்துகிறேன்.

முதல்வர் ஜெயலலிதா இன்னும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளதையடுத்து மேற்கூறிய நடவடிக்கைகள் அவசரமானது" சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT