தமிழகம்

பிரேதப் பரிசோதனை முடிந்தது: ராம்குமாரின் உடல் தந்தையிடம் ஒப்படைப்பு - சொந்த ஊரில் இன்று இறுதிச் சடங்கு

செய்திப்பிரிவு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத் துவமனையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. செங்கோட்டை அருகே உள்ள சொந்த ஊரில் இன்று இறுதிச் சடங்கு நடக்கிறது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 18-ம் தேதி சிறையில் மின்சார வயரைக் கடித்து அவர் தற்கொலை செய்துகொண்ட தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

மகனின் பிரேதப் பரிசோதனை குழுவில் தனது தரப்பில் தனியார் டாக்டர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் உட்பட 5 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் பிரேதப் பரிசோதனையில் இடம் பெறுவர். அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பரமசிவம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம் குமாரின் உடல் பிரேதப் பரிசோ தனை நேற்று நடந்தது. திருவள்ளூர் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி 9.45 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். 10 மணி அளவில் ராம்குமா ரின் உடலை அடையாளம் காட்டிய பரமசிவம், மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதார். மகனின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டிருந்த காயங்கள் குறித்து மாஜிஸ்திரேட்டிடம் அவர் தெரி வித்தார்.

இதைத் தொடர்ந்து பகல் 11.15 மணி அளவில் மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி முன்னிலையில் டெல்லி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் கே.குப்தா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் செல்வகுமார், மணிகண்ட ராஜா, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை டாக்டர் கே.வி.வினோத் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவ மனை டாக்டர் பாலசுப்பிரமணி யன் ஆகியோர் பிரேதப் பரிசோத னையை மேற்கொண்டனர்.

பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. பகல் 1.15 மணிக்கு பிரேதப் பரிசோதனை முடிந்தது. மாலை 3.45 மணிக்கு ராம்குமாரின் உடல் அவரது தந்தை பரமசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே டி.மீனாட்சி புரத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸுடன் பாதுகாப்புக்காக போலீஸாரும் வாகனத்தில் சென்றனர். சொந்த ஊரில் இன்று மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை நடைபெறுவதை யொட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பாதுகாப்புப் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

நிருபர்களிடம் திருமாவளவன் கூறும்போது, ‘‘ராம்குமாரின் உடல் பாகங்களை ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசின் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். பிரேதப் பரிசோதனை சான்றிதழ், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களின் நகல்களை வழங்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியிடம் பரமசிவம் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதுபற்றி நட வடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று மாஜிஸ்திரேட் தெரி வித்தார். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி வழக்கறிஞர்கள் குழுவினரு டன் பேசி முடிவு எடுப்பதாக பரம சிவம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்துக்கு, ராம்குமாரின் உடல் இன்று காலை கொண்டு வரப்படுவதால், அங்கு நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்தே மீனாட்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருநெல்வேலி சரக டிஐஜி தினகரன், காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் ஆகியோர் நேற்று இரவே செங்கோட்டை பகுதியில் முகா மிட்டனர்.

SCROLL FOR NEXT