லாரி மோதி இடது கை பாதிக்கப்பட்ட மேசனுக்கு ரூ.25.41 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஓட்டுநர், உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் பி.ராஜ்குமார் (32). இவர், கடந்த 2017 பிப்ரவரி 17-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்திசையில் பொள்ளாச்சி வடபுதூரைச் சேர்ந்த எம்.சுப்பிரமணியம் ஓட்டிவந்த லாரிமோதி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் ராஜ்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு, அஜாக்கிரதையால் விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்காக மனுதாரருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இடது கையில் ஏற்பட்டகாயத்தால் 63 சதவீதம் ஊனம் ஏற்பட்டதாக மருத்துவ குழுமம் சான்றளித்துள்ளது.
விபத்து நடந்தபோது மனுதாரர் மேசனாக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு வருவாயை இழக்கச் செய்யும். எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.25.41 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் வாகன ஓட்டுநர், உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் இணைந்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.