தமிழகம்

சென்னை விடுதியில் ஐஎஸ்ஐ உளவாளிகள் இருப்பதாக வதந்தி

செய்திப்பிரிவு

சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகள் தங்கி இருப்பதாகவும், அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் நேற்று தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். ஆனால், அங்கு ஐஎஸ்ஐ உளவாளிகள் யாரும் இல்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னை சாலிகிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராஜனை கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ‘க்யூ’ பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர், பெரியமேடு விடுதியில் தங்கியிருக்கிறார். இதனால், ஐஎஸ்ஐ உளவாளிகள் தங்கியிருப்பதாக வதந்தி பரவிவிட்டது’’ என்றார்.

SCROLL FOR NEXT