கோயில்களில் தமிழில் மட்டுமே அரச்சனை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் தொடங்கியுள்ளது. இதற்கான தொடக்க விழா தமிழறிஞர் இலக்குவனர் நினைவு நாளான நேற்று திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்றது.
இதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக கோயில்களில் தமிழில் மட்டும்தான் அர்ச்சனை செய்யப்பட வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதை விட முக்கியமானது தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது.
ஆண்டாள் தனது பாசுரத்தை தமிழில்தான் எழுதினார். திருவில்லிபுத்தூர் கோயிலில் கூட தமிழில் அர்ச்சனை இல்லை, பாசுரங்கள் தமிழில் பாடப்படுவதில்லை. இங்கு இந்து என்ற ஒன்று இல்லை. சைவ மதம்தான் எங்கள் மதம். சைவக்குறவர்கள்தான் இருக்கிறார்களே தவிர இந்து குறவர்கள் என்று யாரும் இல்லை.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஏன் சம்ஸ்கிருதத்தை புகுத்த வேண்டும். இதற்கென எந்த மாநிலமும் கிடையாது. யாரும் பேசுவதும் இல்லை. ஆகவே, கோயில்களில் தமிழ் ஒலிப்பதை நாங்கள் உரிமையாக கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.