மூணாறில் தற்காப்புக்காக புலியைக் கொன்ற பழங்குடியின விவசாயி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் சிக்கனம்குடி உள்ளது. இங்குள்ள பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விவசாயி கோபாலன்(42). நேற்று காலை தனது தோட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்னால் இருந்து புலி ஒன்று ஆக்ரோஷ மாகத் தாக்கியது.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கோபாலன், உடனே சுதாரித்துக்கொண்டு பாதுகாப்புக்காக தான் வைத்திருந்த கத்தியால் புலியின் தலைப்பகுதியில் குத்தினார். இதில் அதே இடத்தில் புலி உயிரிழந்தது.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்த கோபாலனை மீட்டு அடிமாலி அரசு தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மாங்குளம் வனத்துறை அதிகாரி ஜெயச்சந்திரன் கூறுகையில், பாதுகாப்புக்காக புலியைக் கொன்றதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றார்.