தமிழகம்

முதல்வருக்கு அப்போலோவில் தொடர்ந்து சிகிச்சை: லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் புறப்பட்டனர்

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக வந்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக் கான மருந்து மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டன. மேலும் ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

மூன்றாவது முறையாக கடந்த 12-ம் தேதி சென்னை வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் இரண்டாவது முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினரும் முதல்வருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களின் ஆலோசனையின்படி முதல் வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையிலிருந்து 2 பெண் பிசியோதெரபி டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, லண்டன் டாக்டர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி அப்போலோ டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நெல்லை தட்சிணமாற நாடார் சங்கத் தலைவர் சபாபதி நாடார் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில், “முதல்வரின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக வந்தோம். முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மக்களை துணைத் தலைவர் மு.தம்பி துரை, டாக்டர்கள் தெரிவித்தனர். முதல் வர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்றார்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அப்போலோ மருத்துவமனை முன்பு உண்ணா நோன்பு நடைபெற்றது.

முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அங்கிருந்து எடுத்து வரப்பட்ட பிரசாதம் அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி அப்போலோ மருத்துவமனை முன்பு சிலர் தேங்காய் உடைத்தனர். அதிமுக மகளிரணியினர் விநாயகர் சிலையை வைத்து பிரார்த்தனை செய்தனர்.

SCROLL FOR NEXT