தமிழகம்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் எளிதில் செல்ல அரசு செய்ய வேண்டியது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ள சூழலில், அங்கு பயணிகள் எளிதில் செல்ல தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இல்லையேல் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை வெகுவாக இழக்க நேரிடும் என போக்குவரத்து ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது கோயம்பேடு பகுதியில் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் நெரிசல் பெருமளவு குறைந்துள்ளது.

மேலும் விழாக்காலங்களில் தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளிவட்டச் சாலை மூலம் ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களை இயக்க அறிவுறுத்துவதால் கோயம்பேட்டைச் சுற்றிலும் நெரிசல் வெகுவாக குறைந்திருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறு இங்கு சோதனை முறையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு இடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் தொடங்கி, தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆனால், அங்கு பயணிகள் செல்வதற்கு போதிய வசதிகள் இல்லைஎன்பதே போக்குவரத்து ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

தற்போது அதிகபட்சம் 20 கிமீ பயணித்து கோயம்பேட்டை அடையும் ஒருவருக்கு கிளாம்பாக்கம் செல்ல தொலைவு, அலைச்சல், செலவு கூடுதலாகிறது.

எனவே, கிளாம்பாக்கத்தை பயணிகள் எளிதில் அடைவதற்கு அரசு செய்ய வேண்டியவை குறித்து போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தபிரியன் காமராஜ் கூறியதாவது:

பேருந்து நிலைய இடமாற்றத்துக்கு போக்குவரத்து நெரிசலைக் காரணமாகக் கூறுவோர், இதற்கு பேருந்துகள் 6 சதவீதம் அளவுக்கு மட்டுமே காரணம் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். பிராட்வேயில் நெரிசலைக் குறைக்க பேருந்து நிலையத்தை மாற்றிய பிறகு, தற்போதும் அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது.

கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் எளிதில் செல்லும் வகையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திய பிறகே பேருந்துகளை மாற்றி இயக்க வேண்டும். முதல்கட்டமாக பெருங்களத்தூரில் இருந்து பயணிப்போரை பரீட்சார்த்த முறையில் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிக்கச் செய்ய வேண்டும்.

மெட்ரோ ரயில் போக்குவரத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும். சாதாரண கட்டண மாநகர பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே சென்னையில் இருந்து 30 கிமீ பயணித்து கிளாம்பாக்கத்தை அடைவதால் விரைவுப் பேருந்துகளில் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்.

அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பிறகே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்ற முடியும் என உரிமையாளர்கள் உறுதியுடன் உள்ளனர். இந்நிலையில் கோயம்பேட்டை எளிதில் அணுக முடிவதாலும், நள்ளிரவு வரை பேருந்துகள் கிடைப்பதாலும் அரசு பேருந்தை நாடுவோர், கிளாம்பாக்கம் வரை செல்வது சுமை என எண்ணினால் மற்ற பேருந்துகளை ஒப்பிடும்போது அரசு விரைவு பேருந்துகளின் வருவாய் வெகுவாக பாதிக்கும்.

இதன் தீவிரம் உணர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் ரயில்களையும், ஆம்னி பேருந்துகளையும் நோக்கி பயணிகள் செல்வதைத் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்னென்ன சிக்கல்கள்?

கிளாம்பாக்கத்துக்கு குறைந்த செலவில் செல்ல வேண்டுமானால் ஊரப்பாக்கம் வரை மின்சார ரயிலில் சென்று அங்கிருந்து 2 கிமீ சாலை மார்க்கமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அங்கு நேரடியாக சொந்த வாகனங்களில் வருவோரால் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் அதிகரிக்கும். மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தினாலும் கோயம்பேட்டை பயன்படுத்தும் ஒரு லட்சம் பயணிகளை அழைத்துச் செல்ல போதிய மாநகர பேருந்துகள் கைவசமில்லை.

அவ்வாறு மாநகர பேருந்து மூலம் கிளாம்பாக்கத்தை அடைந்தாலும் அங்கிருந்து புறநகர் பேருந்து நிலையம் செல்ல நிலையத்தின் உள்ளேயே சுமார் 500 மீட்டர் நடக்க வேண்டியுள்ளது.

அங்கு கட்டப்படவுள்ள மேம்பாலப் பணியை விரைந்து முடிக்காவிட்டால், அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

SCROLL FOR NEXT