தமிழகம்

கோவில்பட்டி அருகே போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டுகளாக வேலை பார்த்த அரசு பள்ளி ஆசிரியை பணி நீக்கம்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அரசு பள்ளி ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (47). இவர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சிறப்பு நிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பம் செய்தார்.

இவரது சான்றிதழ்கள் தூத்துக் குடி மாவட்ட அரசு தேர்வுகள் துறை இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு தேர்வுகள் துறை உதவி இயக்குநர், சான் றிதழ்களை சரிபார்த்துள்ளார். அப்போது ராஜாத்தியின் ஆசிரியர் பட்டயப் பயிற்சி சான்றிதழில் ஆங்கிலப் பாடத்தில் 37 மதிப் பெண் பெற்றதாக இருந்தது. ஆனால், அவர் சமர்ப்பித்திருந்த சான்றிதழில் ஆங்கிலப் பாடத்தில் மதிப்பெண் 77 என இருந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்ன ராசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சான்றிதழ்களில் உள்ள குளறுபடி குறித்து உண்மைத்தன்மையை அறிய ஆய்வுக்குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் ராஜாத்தியின் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அது போலி யானது என கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து ராஜாத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட தொடக்க கல்வி அலு வலர், ராஜாத்தியை ஆசிரியர் பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கல்வி மாவட்ட அலுவலர் அளித்த புகாரின் பேரில், ராஜாத்தி மீது போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜாத்தி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1994-1996-ம் ஆண்டில் ஆசிரி யர் பட்டயப் பயிற்சியை முடித்துள்ளார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்று அப்பகுதியில் உள்ள காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாறுதல் பெற்றார். கடந்த மார்ச்சில் நடந்த பணியிட மாறுதல் கலந் தாய்வில் கலந்துகொண்டு, நாலாட்டின்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாறுதல் பெற்று பணியாற்றிய நிலையில் போலிச் சான்றிதழ் விவகாரத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT