திருநெல்வேலி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் பங்கேற்கும் அரசு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பாளையங் கோட்டையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள மேடை போலீஸ் ஸ்டேஷனை திறந்து வைக்கிறார். திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற பணிகளையும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளையும் தொடங்கி வைக்கிறார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கவு ள்ளார்.
இதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இப்பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், எம்எல்ஏ அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர காவல் துறை ஆணையர் அவிநாஷ்குமார், துணை ஆணையர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.