வந்தவாசி அடுத்த கோயில்குப்பம் கிராமத்தில் நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள். 
தமிழகம்

வந்தவாசி அருகே கோயில்குப்பம் கிராமத்தில் சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்: புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே கோயில்குப்பம் கிராமத்தில் புதிய தார் சாலை அமைக்காததைக் கண்டித்து சாலையில் உள்ள சேற்றில் பெண்கள் நேற்று நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரில் இருந்து சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோயில்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியும் பலனில்லை. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் உள்ள சேற்றில் நேற்று நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே சாலை சேதமடைந்தது. பின்னர், குண்டும் குழியுமாக உருவெடுத்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் சேற்றில் விழுந்து காயமடைகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புதிய சாலை அமைக்கக் கோரி சாலையில் நாற்று நடும் போராட்டம் செய்கிறோம்" என்றனர். பின்னர், அவர்களாகவே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

SCROLL FOR NEXT