கோப்புப்படம் 
தமிழகம்

“திமுகவை வலுவுடன் எதிர்ப்போம்” - தீர்ப்புக்குப் பின் ஆர்.பி.உதயகுமார் கருத்து

என். சன்னாசி

மதுரை: “திமுகவை வலிமையுடன் எதிர்த்து மீண்டும் அதிமுக ஆட்சியை வழங்குவேம்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி தொடர்ந்து வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார். ஜெயலலிதா அதனை மூன்றாவது பெரிய மக்கள் இயக்கமாக மாற்றினார்.

இவர்களுக்கு பிறகு அதிமுக இயக்கத்தை எதிர்கட்சி தலைவர் கே.பழனிசாமி காப்பாற்றி, இருவரின் கனவுகளை நிறைவேற்றி வழி நடத்தினார். இவ்வியக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்து ஆட்சியை நடத்தினார். மக்கள் பாதுகாவலரான அவருக்கு நீதியரசர்கள் மகத்தான தீர்ப்பு தந்துள்ளனர். இவரிடமே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. அதிமுகவின் பெருமைகளை கட்டிக்காக்கத் தொண்டர்கள் தயாராகிவிட்டனர். இனிமேல் எந்த தேர்தலாக இருந்தாலும், அதிமுக வெற்றியடையும்.

நியாயம், சத்தியம், தர்மம், உண்மை தொண்டர்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு இது. எதிர்க்கட்சி தலைவருக்கான செல்வாக்கை தெரிந்தும், தெரிந்து கொள்ளாமலும், இருப்பவர்களுக்கும் காலம் தக்க பாடம் புகட்டும். திமுகவை வலுவுடன் எதிர்த்து, மீண்டும் அதிமுக ஆட்சி வழங்குவோம். இதற்கு இத்தீர்ப்பே அத்தாட்சி” என்றார் அவர்.

SCROLL FOR NEXT