தமிழகம்

மின்மாற்றி வெடித்ததால் மாற்றுத்திறனாளி ஆன நெல்லை நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: மின்மாற்றி வெடித்ததில் மாற்றுத்திறனாளியான நபருக்கு மின்வாரியம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் சவரி ஆண்டோ நிஷாந்த். இவர் 2018-ல் நவம்பர் மாதம் மின்மாற்றி வெடித்து சிதறிய விபத்தில் சிக்கினார். இதில் முகம் தவிர்த்து உடலின் மற்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து நிரந்தர மாற்றுத்திறனாளியானார்.

இந்த நிலையில், சவரி ஆண்டா ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், மின்வாரியம் மின்மாற்றியை சரியாக பராமரிக்கவில்லை. அதனால் மின்மாற்றி வெடித்துள்ளது. இதனால் மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, விபத்து காரணமாக மனுதாரர் நிரந்தர மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். மனுதாரரின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு மின்வாரியம் 8 வாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை மனுதாரரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த தொகைக்காக வட்டியை மனுதாரர் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை பெறலாம். 10 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சத்தை வங்கியிலிருந்து திரும்ப பெறக்கூடாது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு மனுதாரருக்கு மின்வாரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவ செலவுக்கு மின்வாரியமே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT