சென்னை: "அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை, இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. இதன்படி, ஒற்றைத் தலைமை என்ற அதிமுகவின் நோக்கம், உள்ளிட்ட முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால், ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நடந்து முடிந்த அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக, அதாவது கடந்த 11.7.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்த தனி நீதிபதியின் உத்தரவு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை, இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. இதன்படி, ஒற்றைத் தலைமை என்ற அதிமுகவின் நோக்கம், உள்ளிட்ட முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதான் தொண்டர்களின் விருப்பம், சட்டப்படி அது செல்லத்தக்கது என்ற தீரப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த வழக்கின்போது, பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பெற்றிருக்கிறார். எனவே அவர் தலைமையில் நடைபெற்ற அந்த பொதுக்குழு செல்லும் என்ற வாதத்தை நாங்கள் முன்வைத்தோம். அந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுபோல, அதிமுகவின் சட்ட விதிகளின்படிதான் இந்த பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்தவுடன் இதுகுறித்து விரிவாக பேசுவோம்" என்று அவர் கூறினார்.