சென்னை: தமிழகத்தில் வரும் 4-ம் தேதி நடக்கஉள்ள சிறப்பு மெகா முகாமில் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 2021ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்டஅனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 2 தவணை தடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடும் நோக்கில் சிறப்பு மெகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 34 முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்தில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. வரும் 4-ம் தேதி நடக்கவுள்ள முகாமில், முதல்தவணை, 2-வது தவணை, பூஸ்டர்தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 3.5 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும் என்றுபொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.