மனிதக் கழிவுகளை அள்ளும் போது விஷவாயு தாக்கி இறந்த 118 துப்புரவுத் தொழிலாளர் களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் தலைவரான ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பொதுநல மனுவில், ‘‘கையால் மனிதக் கழிவுகளை அள்ளுவது சட்டவிரோதம்.
துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களின் கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டப் பிரிவுகளான 11 மற்றும் 12 அவர்களுக்கான மறுவாழ்வு பற்றியும் கூறியுள்ளது. கடந்த 1993-ல் இருந்து தற்போது வரை 150 துப்புரவுத் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளுவதற்கு உயர் நீதிமன்றமே தடை விதித்த பிறகும் கூட 48 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் இறந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் அதுபோன்ற துப்புரவுத் தொழிலாளிகளைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வும், பொதுக் கழிப்பிடங்களைச் சுகாதாரமாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம் விஷவாயு தாக்கி இறந்த துப்புரவுத் தொழிலாளிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க இடைக்காலமாக உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து பலியான தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
முதல் அமர்வில் விசாரணை
இந்த வழக்கு விசாரணை மீண்டும் தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது விஷவாயு தாக்கி இறந்த 59 பேருக்கு மட்டுமே அரசு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், எஞ்சிய 118 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்க வில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இதுவரை உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி இழப்பீடு வழங்க அரசு தாமதம் செய்தது. எனவே உடனடியாக 118 துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை உரிய இழப்பீடாக வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கிய விவரம் குறித்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.