தருமபுரி மாவட்டம் தும்பல அள்ளி அணை நிரம்பியதையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உபரிநீரை திறந்து வைத்தார். 
தமிழகம்

தும்பலஅள்ளி அணையில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தும்பலஅள்ளி அணை 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய நிலையில் உபரிநீரை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா தும்பல அள்ளி ஊராட்சியில் பெண்ணையாற்றின் கிளை நதியான பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே நரியன அள்ளி பகுதியில் தும்பல அள்ளி அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாத நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக அணைக்கு நீர்வரத்து நின்று போனது.

அதற்கு முந்தைய 3 ஆண்டுகளிலும் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் வந்ததால் அணை முழுமையாக நிரம்பவில்லை. இந்நிலையில், நடப்பு ஆண்டு தொடர் மழையால் தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இந்த அணையில் 14.76 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இந்நிலையில், நேற்று முன் தினம் அணையின் நீர்மட்டம் 12.14 அடியாக உயர்ந்தது.

மேலும், அணைக்கு விநாடிக்கு 256 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்து விடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சாந்தி, உபரி நீர் வெளியேறும் வகையில் அணையின் மதகை திறந்து வைத்தார்.

உபரி நீர் முழுமையாக பூலாப்பட்டி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்லவோ, ஆற்றில் மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும், பூலாப்பட்டி ஆற்றோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின்போது, நீர்வளத் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் குமார், காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார், உதவி பொறியாளர்கள் மாலதி, வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT