தமிழகம்

சேலத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; ஏற்காடு காட்டாற்றில் வெள்ளம்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் கொட்டிய கனமழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலம் சேதமானதால் 26 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பின்னர் சீரானது.

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினமும், நேற்றும் கனமழை பெய்தது. குளிர்ந்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

வெள்ளக்காடாய் மாறிய ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 65மிமீ மழை பெய்தது. இதனால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு மலைப்பாதையில் வாழவந்தியை அடுத்துள்ள ஆத்துப்பாலத்தை மூழ்கடித்து மழை வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்றது.

26 கிராமங்கள் துண்டிப்பு: காடுகளில் உள்ள மரம், செடி, கொடி, பாறைகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்த வழியாக 26 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து நேற்று முன் தினம் நிறுத்தப்பட்டது. நேற்று வெள்ள நீர் வடிந்ததையடுத்து போக்குவரத்து சீரானது.ஏற்காடு மலையில் பெய்த கனமழையால் திருமணி முத்தாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

பாலம் உடைப்பு: சேலம்-அரூர் பிரதான சாலையில் குப்பனூர் ஊருக்குள் செல்லும் சாலை நடுவே திருமணிமுத்தாற்றின் மேம்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால் மழை நீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மேம்பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த வழியாகச் செல்ல வேண்டிய மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

சாய்ந்து விழுந்த புளியமரம்: வாழப்பாடி அண்ணா நகரில் பேளூர் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் நேற்று முன்தினம் செய்து கனமழையால் சாலையில் சரிந்தது.

இதனால் வாழப்பாடி-பேளூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல பெத்தநாயக் கன் பாளையம், தம்மம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, ஓமலூர் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சேலம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): ஏற்காடு 65.2, பெத்தநாயக்கன் பாளையம் 49.5, தம்மம்பட்டி 40, ஆனைமடுவு 37, சங்ககிரி 31, ஓமலூர் 27, மேட்டூர் 19, சேலம் 11, கரியகோவில் 10, எடப்பாடி 10, காடையாம்பட்டி 5, ஆத்தூர் 4, வீரகனூர் 4 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT