தமிழகம்

முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (செப்.2) தொடங்குகிறது.தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான கணினிவழித் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவு ஜூலை 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 17 பாடங்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்புக்கு தகுதிபெற்றவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (செப்.2) தொடங்கி 4-ம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வு வாரியத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஒரு பணியிடத்துக்கு இருவர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வராத பட்டதாரிகள் தகுதியான மதிப்பெண் பெற்றாலும், அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருபவர்கள் அழைப்புக் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தவறாமல் கொண்டுவர வேண்டும். வளாகத்துக்குள் செல்போன், பைகள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்வு வாரியம் விதித்துள்ளது.

SCROLL FOR NEXT