தமிழகம்

தொடரும் உயிரிழப்புகளால் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் மூடல்: மீன் வர்த்தகம் பாதிப்பு

செய்திப்பிரிவு

தொடரும் உயிரிழப்புகளால் குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது. இதனால் பல கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுகம் மூலம் தூத்தூர் , இனையம் மண்டலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீன்பிடித் துறைமுகம் சரியான பாதுகாப்பு கட்டமைப்புடன் அமைக்கப்படாததால் முகத்துவாரத்தில் அடிக்கடி படகு கவிழ்ந்து கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறை மீனவர் சைமன் உயிரழந்தார்.

சடலத்துடன் போராட்டம்: கடந்த 29-ம் தேதி இனயம் புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் அமல்ராஜ் ( 67 ) பைபர் படகில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய போது வள்ளம் கவிழ்ந்ததால் கடலில் விழுந்து மாயமானார். மீன்பிடி துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் திரண்டு மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அமல்ராஜின் உடல் அன்று மதியம் துறைமுக நுழை வாயில் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அமல்ராஜின் உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் அங்கேயே வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தை: குளச்சல் டி எஸ் பி தங்கராமன் தலைமையில் கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

துறைமுக சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். உயிரிழப்பை தடுக்கும் வகையில் சீரமைப்பு பணி முடிந்த பின்னரே மீனவர்களை துறைமுகம் வழியாக கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என போராட்டக்கார்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை நிறைவேற்றுவதாக சார் ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அமல்ராஜின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சீரமைப்பு பணி முடியும் வரை தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூட சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இத்துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு தொழில் செய்யும் மீனவர்கள் தங்கள் படகுகளை குளச்சல், முட்டம் மற்றும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி டிரஜ்ஜர் இயந்திரம் கொண்டு வரப்பட்டு தேங்காய்பட்டினம் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் மணல் அள்ளும் பணி தீவிரப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தேங்காய்பட்டினம் துறைமுகம் மூடப்பட்டது. இதனால் அங்குள்ள மீன் ஏலக்கூடம் வெறிச்சோடியது. மீன் பிடிக்கச் சென்ற சில விசைப்படகுகள் துறைமுகம் மூடப்பட்டது தெரியாமல் கடலுக்குள் நீண்ட நேரம் நின்றன.

பின்னர் விவரம் தெரிந்து குளச்சல் மற்றும் பிற துறைமுகப் பகுதிகளில் அவை கரை திரும்பின. மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறு மற்றும் மொத்த மீன் வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அரசுக்கும் வாகன நுழைவு கட்டணம் உள்ளிட்ட வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

துறைமுக சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT