தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையாவிட்டால் திராவிடர் கழகம் டெல்லியில் போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் மோடி பதவிக்கு வந்தவுடன், மத்திய பட்ஜெட்டிலே நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அதற்குமுன் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோர், தமிழகத்தில் ஓர் நகரத்தில் உயர்தரமான என்ற 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்து, மாநில அரசுடன், நில ஒதுக்கீடு முதலியவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம்-கடிதப் போக்குவரத்துகளும் நடைபெற்றன.
தமிழக சட்டமன்றத்திலும் முதல்வர் தமிழ்நாட்டில் மத்திய அரசு அமைக்கவிருக்கும் 'எய்ம்ஸ்' மருத்துவமனை - புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை போன்று அமையும் என்றெல்லாம் கூறினார்.
தமிழக அரசு, மத்திய அரசு கேட்டதற்கு மறு மொழியாக, எட்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதோடு அத்தகைய 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைவதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளையும் மாநில அரசு செய்து தரும் என்றும் உத்தரவாதம் கூறப்பட்டது
மேலும், அத்தகைய சிறப்பு மருத்துவமனை அமைவதற்குத் தேவையான 200 ஏக்கர் நிலம், உயர்தரமான சாலை வசதிகள், ரயில் நிலைய வசதிகள் போன்ற அத்துணை கட்டமைப்புகளையும் கூடச் செய்து தரத் தயார் என்றும் கூறப்பட்டது.
மத்தியக் குழுவினர் வருகை தந்து பல நாட்கள் ஆராய்ந்த நிலையில், இறுதிக்கட்டத்தில், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டத்தில்உள்ள பெருந்துறையையும் இந்தக் கட்டமைப்புடன் உள்ள ஏற்ற இடங்கள் என்பதாகத் தேர்வு செய்யப்பட்டது.
தமிழக அரசும் பெருந்துறையில் தேவைக்குமேலேயே - 350 ஏக்கர் நிலம் அளிக்கத் தயாராகி, முன்வந்தது. தமிழக மக்களும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், பெரும் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்காமல், பொய்த்துவிட வேண்டும் என்று நாம் விரும்பினாலும், இது உண்மையாகி விடும் வாய்ப்பும் 50 விழுக்காடு உள்ளது.
தமிழகத்தில் உள்ள எந்த நகரமும் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையத் தகுதி உடையதாக இல்லை என்று கூறியுள்ளனராம். எப்படியாவது இந்த 'எய்ம்ஸ்' சிறப்பு மருத்துவமனையை கர்நாடகத்திற்கோ, ஆந்திராவிற்கோ கொண்டு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக, முழு வீச்சில் நடைபெறுகின்றன என்பது மற்றொரு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது!
கிண்டி 'சிப்பெட்' மாற்றம்?
கிண்டியில் உள்ள 'சிப்பெட்' தலைமையகத்தை டில்லிக்குக் கொண்டு போக முனைந்ததை எதிர்த்துக் கிளம்பிய புயல் காரணமாகவே, அதற்கு மூலகாரணமான கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் அய்யர் ஒப்புக்கு அதனை மறுத்துள்ளார். இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளிஎறிய அனைத்துக் கட்சி, அமைப்புகளும் ஆர்த்தெழவேண்டும்.
டெல்லியின் இந்த வஞ்சகத்தை எதிர்த்து விரைவில் திராவிடர் கழகம், ஒத்த கருத்துள்ள அனைவரையும் அழைத்து, கலந்துரையாடி, அறப்போர் கிளர்ச்சித் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் தயங்காது'' என்று வீரமணி கூறியுள்ளார்.