கோவை: கோவையிலிருந்து மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வியாழக்கிழமை (செப்.1) முதல் தொடங்கியது. இதனை, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் கோவை ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவையிலிருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (16721), இரவு 7.35 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16722), நண்பகல் 12.45 மணிக்கு கோவை வந்தடையும்.
இந்த ரயில்கள், வழியில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, அக்கரைப்பட்டி, திண்டுக்கல், அம்பாதுரை, கொடைரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல்நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் கோவையிலிருந்து மதுரைக்கு செல்வதற்கான கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்படுகிறது.