அமைச்சர் பொன்முடி | கோப்புப் படம் 
தமிழகம்

“தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகம் புழங்க குஜராத் தான் காரணம்” - பொன்முடியின் ‘லாஜிக்’

செய்திப்பிரிவு

சென்னை: "போதைப்பொருட்கள் கடத்தலில் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம்தான் நம்பர் 1. அங்குதான் அதிகமாக கடத்தல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இங்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை எல்லாம் முழுமையாக தடை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இந்தியாவிலேயே குஜராத்தில்தான் போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. போதைப்பொருட்களின் நடமாட்டமும் அங்குதான் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக, குஜராத்தில் இருக்கிற துறைமுகம். அதனை தனியார்மயமாக்கிவிட்டனர். போதைப்பொருட்கள் வெளிநாட்டிலிருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது அது பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு காரணம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் இந்த போதைப்பொருட்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் மூலம்தான் கடத்தல் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம்தான் இதில் நம்பர் 1. அங்குதான் அதிகமாக கடத்தல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இங்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை எல்லாம் முழுமையாக தடை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் துறைமுகங்கள் மூலம் நடைபெறும் இந்த கடத்தலை தடுத்து நிறுத்தக் கோரி எதிர்கட்சிகள் எடுத்துக் கூறியும், அவர்கள் அதை செய்யவில்லை. அதனால்தான் தமிழகத்திலும் இதுபோன்றவை எல்லாம் வளர்ந்திருக்கின்றன" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT