கனல் கண்ணன் | கோப்புப் படம். 
தமிழகம்

கனல் கண்ணணுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்பதாக பேசியிருந்தார். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மாற்று கொள்கை உடையவர்கள் குறித்து ஏன் பேச வேண்டும்? தேவையற்ற கருத்துகளை யூடியூபில் பேசுவது தற்போது ஃபேஷனாகிவிட்டது என கருத்து தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 4 வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். மேலும் இனிமேல் இதுபோன்று பேச மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT