தமிழகம்

மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும்: உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை

செய்திப்பிரிவு

அரசு ஊழியர்களில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட 9 மாத மகப்பேறு விடுப்புக்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த ஜி.வின்சென்ட், தி இந்துவின் உங்கள் குரலில் கூறியதாவது: அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தற்போது 6 மாதமாக உள்ளது. இது 9 மாதமாக உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ், ‘அரசு பணியில் இருக்கும் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தையை பேணிப் பாதுகாக்கும் வகையில் பேறு காலச் சலுகையாக வழங்கப்படும் 6 மாத மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்தார்.

ஆனால், இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், செப்டம்பர் 30-ம் தேதி 6 மாத விடுப்பு முடியும், அரசு பெண் ஊழியர்கள் விடுப்பை நீட்டிக்க முடியுமா முடியாதா என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் கேட்டபோது இது தொடர்பாக அரசாணை இன்னும் கையெழுத்தாகவில்லை என கூறுகின்றனர். அரசாணையை விரைவில் வெளியிட்டால், மகப் பேறு விடுப்பு எடுத்துள்ள பெண் கள் பயன்பெறுவார்கள்’’ என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இது தொடர்பாக பணியாளர் நலத் துறையினரிடம் கேட்ட போது,‘‘ இதற்கான அரசாணை வெளியிட கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசு பரிசீலனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT