அங்கீகாரம் பெறாத மனைகளையும், வீடுகளையும் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ரியல் எஸ்டேட் சங்கத்தினர் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத வீடுகளையும், மனைகளையும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் 95 சதவீதம் அளவுக்கு பத்திரப்பதிவு நிறுத்தப்பட் டுள்ளது.
பட்டா பெற்று பல தலை முறைகளாக வீடு கட்டிக்கொண்டு மனைவரி, வீட்டு வரி, குடிநீர் வடிகால் வரி, மின் இணைப்பு பெற்று அனுபவித்து வரும் சொத்துக்களை பதிவு செய்யவும், பட்டா மனைகளை விற்பனையாளர்களிடம் கிரையம் பெற்று அதற்காக முத்திரைக்கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்திய பிறகு அவற்றை விற்பது, அடமானம் வைப்பதற்கு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
பதிவு செய்த லே-அவுட் மனைகளில், பதிவு செய்யாத மீதி மனைகளையும் பத்திரம் பதிவு செய்யவும், சட்டப்படியான விவசாய நிலங்களைத் தவிர மற்ற நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்து எளிய முறையில் பஞ்சாயத்து அங்கீகாரம் அளித்து பத்திரம் பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் மற்றும் தொழிலா ளர்கள் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் கே.கிருஷ்ணா, மாநிலத் தலைவர் பி.எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.