தென் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் 65 ஆயிரம் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்காக தென் மண்டல ஐஜி மற்றும் டிஐஜிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மீது 2018-ல் முதுகுளத்தூர் போலீஸார் குற்ற வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தேன். அப்போது, அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த வழக்கின் விசாரணையை விரைவில் விசாரிக்க முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் என் மீதான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை நகலைக் கேட்டு விண்ணப்பித்தேன். அப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது தெரியவந்தது. இதனால் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் மோகன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது நீதிமன்ற பணியாளர்கள் நேரம், தேதி, முத்திரை, கையெழுத்து கொண்ட ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். இதை மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும்.
இது தொடர்பாக தென் மண்டல காவல்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதில் ஒப்புகைச் சீட்டு வழங்க உத்தரவிட்ட பிறகு, கடந்த 2 மாதங்களில் 2011 முதல் 2021 வரை பதிவான 65,000 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு பெறப்பட்டுள்ளது.
இதில் 25,000 வழக்குகளில் விசாரணை தொடங்கியுள்ளது.
38 ஆயிரம் வழக்குகளில் தடயவியல் மற்றும் பிற துறைகளில் இருந்து அறிக்கை வர வேண்டி இருப்பதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தாமதமாகி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி, தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், டிஐஜி பொன்னி ஆகியோரை நீதிமன்றம் பாராட்டுகிறது என்றார்.
மேலும் இந்த வழக்கில் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் தொடர்பான அறிக்கையை தென் மண்டல ஐஜி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ. 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.