சிவகாசி பட்டாசு விபத்து சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று (வியாழக்கிழமை) பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அருகே ஸ்கேன் மையத்தில் இருந்த ஊழியர்கள் 5 பேர் மற்றும் பரிசோதனைக்கு வந்த 3 மாத கர்ப்பிணி உட்பட 8 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை விற்பனையாளர்கள் செண்பகராமன், ஆனந்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள்
இதுதவிர, கட்டிட உரிமையாளர் சுதந்திரராஜன், மினிவேன் டிரைவர், சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வெடிவிபத்து நடந்த பகுதியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.பி. எச்சரிக்கை:
முன்னதாக, "நகரப் பகுதிக்குள் இதுபோன்று பட்டாசு கடை நடத்தி வருபவர்கள் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு பட்டாசுகளை கையாள வேண்டும்.
விதிமுறைகளை மீறும் பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வு நடத்தப்படும்" என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் எச்சரித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.