தமிழகம்

மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற கவுன்சிலர்கள் கவுன்சில் கூட்டங்களில் மட்டுமல்லாது மண்டலக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களிலும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை யைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

சென்னை மாநகராட்சி சட்டப் பிரிவு 53(1)(ஐ)-ன் படி தொடர்ந்து 3 மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்காத கவுன் சிலர்களை தகுதி நீக்கம் செய்யலாம்.

ஆனால், இந்த சட்டப்பிரிவின் கீழ் கவுன்சிலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சென்னை மாநகராட்சியில் பல கவுன்சிலர்கள் தொடர்ந்து 3 கூட்டங்களுக்கும் மேல் பங்கேற்காமல் உள்ளனர். மண்டல அளவில் நடைபெறும் கூட்டங்களிலும் கவுன்சிலர்கள் முறையாக பங்கேற்பது இல்லை. மன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாத கவுன்சிலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாநில தேர்தல் ஆணையம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி வழக்கறிஞர், ‘‘கவுன்சிலர்கள் யாரும் தொடர்ந்து 3-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற் காமல் இல்லை.

அனைவரும் சட்டப்படியாக மாமன்றக் கூட்டங்களில் பங் கேற்றுள்ளனர். மண்டல அளவில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்காத கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் வழியில்லை” என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘மாமன்ற கூட்டமானாலும் சரி, மண்டலக் கூட்டமானாலும் சரி. அந்த கூட்டங் களில் மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் பங்கேற்கவில்லை என்றால் அது மக்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அனைத்து கவுன்சிலர்களும் கண்டிப்பாக அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்” எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT