சென்னை: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50-வதுஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெசன்ட நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் 1972-ம் ஆண்டுகட்டப்பட்டது. இந்த திருத்தலத்தின் 50-வது ஆண்டு திருவிழாபொன்விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னைபெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் நேற்றுமாலை 5.45 மணிக்கு அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீளமுள்ள கொடியானது பவனியாகக் கொண்டுவரப்பட்டது.
இதை தொடர்ந்து, அர்ச்சிக்கப்பட்ட பின் திருத்தல வளாகத்தில் உள்ள 75 அடி உயரக் கொடிக்கம்பத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடி ஏற்றி வைத்தார்.
இத்திருவிழாவை காண சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பிறமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று தொடங்கிய இத்திருவிழா வருகிற 8-ம் தேதி நிறைவடைய உள்ளது. தினமும் மாலை 5.30 மணி திருப்பலியும், தேர்பவனியும் நடைபெற உள்ளது. செப். 8-ம் தேதி மாலை 5.30 மணி திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.