மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு இன்று (ஆக. 30) நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்த மதுரை மேலூரைச் சேர்ந்த மாணவர் லோகேஷ்வருக்கு தேர்வு மைய அனுமதிச் சீட்டு 2 நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் தேர்வு மையம் லட்சத்தீவு எனக் குறிப்பிட்டிருந்தது.
லட்சத்தீவுக்கு கப்பல் அல்லது விமானத்தில் சென்றுதான் தேர்வு எழுத முடியும். கால அவகாசம் இல்லாத நிலையில் அவர் எப்படி அங்கு செல்ல முடியும். இதுகுறித்து மாணவரின் தந்தை என்னிடம் தெரிவித்தார். தேர்வு மையத்தை மாற்றக் கோரி மத்திய அரசின் கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இந்நிலையில், தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தேசிய தேர்வு முகமை ஒருங்கிணைப்பாளர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.