தமிழகம்

தீபாவளியையொட்டி பாரத் தர்ஷன் ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி ஐஆர்சிடிசி சார்பில் ‘பாரத் தர்ஷன்’ ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில் மதுரையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பல்வேறு விதமான சுற்றுலா பயணத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாரத் தர்ஷன் ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்வி சுற்றுலா போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் மூலம் மட்டுமல்லாமல், விமான மூலமாகவும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரத் தர்ஷன் ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து வரும் 25-ம் தேதி புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், விஜயவாடா வழியாக டெல்லி செல்கிறது.

கயா, வாரணாசி, அலகாபாத், டெல்லி, மதுரா, ஆக்ரா உள்ளிட்ட ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா இடங்களை பார்க்கலாம். மொத்தம் 12 நாட்கள் இந்த சுற்றுலா பயணம் இருக்கும். ஒருவருக்கு ஸ்லீப்பர் கிளாசில் ரூ.10,035 எனவும், 3-ம் வகுப்பு ஏசி பெட்டியில் ரூ.13,940 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தகவல்களை பெற சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 044-64594959, 9003140681, 9003140673 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT