ராமேசுவரம்: தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
நேற்று அதிகாலை தலைமன்னார் அருகே ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிஷாந்த், ஆண்டி, கருணாநிதி, உலகநாதன், சூசை வியாகுலம், சேசு ஆகிய 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகே மீனவர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், மீனவப் பிரதிநிதி எம்ரிட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், இலங்கை கடற்படையினரால் 6 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் இன்று (ஆக.29) ராமேசுவரத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென மீனவர்கள் முடிவு செய்தனர்.