தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று மாலை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சந்தித்து, அரசு நிர்வாகம், காவிரி நீர் தொழில்நுட்ப குழு வருகை மற்றும் முதல்வர் உடல் நிலை தொடர்பாக விளக்கம் அளித்தனர். அப்போது, தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவும் உடன் இருந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனை வந்தார். முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டை பார்வையிட்ட அவர், மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நிலை, சிகிச்சைகள் தொடர்பாக விசாரித்து விட்டு சென்றார்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு, தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், ஆளுநர் மாளிகைக்கு சென்று, அவரை சந்தித்தார். அரை மணிநேர சந்திப்புக்குப் பின், மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு தலைமைச் செயலாளர் வந்தார். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருடன், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு 6.10 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 20 நிமிட ஆலோசனைக்குப் பின், 6.32 மணிக்கு மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து அவர்கள், அப்போலோ மருத்துவ மனைக்கு வந்தனர். அதற்குள், அமைச் சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆளுநருடன் நடந்த சந்திப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட் டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திப்பு தொடர்பாக, ஆளுநரின் செயலர் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டதன் பேரில், தமிழக சட்டப்பேரவை முன்னவரும், நிதி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரும் ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை வந்தனர். அவர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவும் வந்திருந்தார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக, அமைச்சர்களிடம் ஆளுநர் விசாரித்து அறிந்தார். உச்சநீதிமன்ற ஆணைப்படி, மத்திய நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை சீரமைப்புத்துறை அமைச்சகத்தால் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, உயர்நிலை தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விரைவில், தமிழகத்தில் காவிரி படுகை பகுதிகளை ஆய்வு நடத்த வருகின்றனர்.
இந்த குழுவினரின் தமிழக வருகைக்கான ஏற்பாடுகள் மற்றும் தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பது தொடர்பாக குழுவினருக்கு தகவல் அளிக் கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் அமைச் சர்களிடம் ஆளுநர் கேட்டார். குழுவினர் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அது தொடர்பான விவரங்களை ஆளுநருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கி கூறினார்.
மேலும், அரசு பொது நிர்வாகம் தொடர் பான விவரங்களை ஆளுநர் கேட்டறிந் தார். அப்போது மாநில தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், தினசரி மேற்கொள்ளப்படும் அரசு நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பொதுவான விஷ யங்கள் தொடர்பாகவும் ஆளுநருக்கு விளக்கினார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.