தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சந்தித்துப் பேசினார். மக்கள் பிரச்சினைகளுக்காக தேவை ஏற்பட்டால் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம் என்று அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நேற்று பகல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். மதியம் 1.40 முதல் 2.10 வரை இந்த சந்திப்பு நீடித்தது. பின்னர் நிருபர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறேன். அந்த வகையில் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். விஜயகாந்துக்கும் எனக்கும் நெடுநாள் நட்பு உள்ளது. அந்த நட்பின் அடிப்படையிலும் அவரை சந்தித்தேன்.
இந்த சந்திப்பின்போது இன்றைய அரசியல் சூழல், உள்ளாட்சித் தேர்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நாங்கள் திமுக அணியில் உள்ளோம். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலோ, மக்களவைத் தேர்தலோ நடக்கவில்லை. எனவே, இதை கூட்டணிக்கான சந்திப்பு என்று கருதத் தேவையில்லை. மக்கள் பிரச்சினைகளில் தேவை ஏற்பட்டால் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ளன. இந்த வழக்கின் தீர்ப்பு வந்ததும் இடங்களை பிரித்துக் கொள்வது குறித்து திமுகவுடன் மீண்டும் பேசுவோம். காவிரி பிரச்சினைக்காக 17, 18 தேதிகளில் நடக்கவுள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும். அதே நேரத்தில், அரசியல் ஆதாயத்துக்காக அந்த கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.