சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தை அதன் முன்னாள் உரிமையாளர் குடும்பத்தினர் சுற்றிப் பார்த்தனர். முதல்வர் ஸ்டாலின், அவர்களை வீடு முழுவதும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார்.
சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு. பழமை மாறாத,ஓடுகள் வேயப்பட்ட அந்த வீடு, அவர் முதல்வராக இருந்தபோது மட்டுமின்றி, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் பரபரப்பாகவே இருக்கும்.
கடந்த 1955 மார்ச் மாதத்தில் சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்துஅந்த வீட்டை வாங்கினார் கருணாநிதி. அப்போது, சரபேஸ்வரரின் பேத்தி சரோஜாவின் திருமணஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
பேத்தி திருமணத்தை அந்த வீட்டிலேயே நடத்திவிடலாம் என்றுஎண்ணம் கொண்டிருந்தார் சரபேஸ்வரர். இதை அறிந்த கருணாநிதி, பேத்தி திருமணம் முடியும் வரைஅவர்கள் அனைவரும் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் என்றும், அதுவரை தான் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
திட்டமிட்டபடி, 1955 ஜூன் மாதத்தில் சரபேஸ்வரர் பேத்தி சரோஜாவின் திருமணம் அதே வீட்டில் நடந்தது. அதன் பிறகு, அந்த வீட்டில் குடியேறினார் கருணாநிதி.
இதற்கிடையில், அங்கு திருமணம் முடித்து அமெரிக்கா சென்ற சரோஜா சீதாராமன், தாங்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதைசமூக ஊடகங்கள் மூலம் அறிந்தமுதல்வர் ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்துக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
67 ஆண்டுகளுக்கு பிறகு, சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன், கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று வந்தார். பேரன் ஜம்புநாதன் உள்ளிட்ட குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், வீடு முழுவதும் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, சகோதரர் தமிழரசு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வீடு என்பது பலரது கனவு. அத்தகைய கனவு இல்லத்தை சம்பாதிக்கும்போது, நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நம்மோடும், நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன.
அதேபோல, எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. திரைத் துறையில்கருணாநிதி வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே அது. இந்த வீடு எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல. இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரரிடம் கருணாநிதி கடந்த 1955 மார்ச் மாதம் வாங்கினார்.
அதே ஆண்டு ஜூன் மாதத்தில்அவரது பேத்தி சரோஜாவின்திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தை கோபாலபுரம் வீட்டிலேயே நடத்த ஒப்புக்கொண்டார் கருணாநிதி.
அன்று தனக்கு திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சரோஜா சீதாராமன் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இருகுடும்பங்களுக்கும் உறவான வீடு நட்பு பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்புடன் பார்த்தது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.