குரோம்பேட்டை, சிட்லபாக்கம் பகுதிகளில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, ஆங்காங்கே அமைந் துள்ள பொதுக் கிணறுகளை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை அடுத்த குரோம் பேட்டை, அஸ்தினாபுரம் பகுதிகள் பல்லாவரம் நகராட்சியில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் தற்போது சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சிட்லபாக்கம் பேரூராட்சியில், சாலையோர குழாய்கள், குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுதவிர ஆங்காங்கே உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
குரோம்பேட்டை, அஸ்தினா புரம், சிட்லபாக்கம் பகுதிகளை பொறுத்தவரை, உள்ளாட்சி நிர்வாகங்கள் அளிக்கும் குடிநீர் ஓரளவுக்கு பொதுமக்களின் தேவையை நிறைவு செய்து வருகிறது. மற்றபடி, நிலத்தடி நீரையே அப்பகுதி மக்கள் பெருமளவு நம்பியுள்ளனர். ஆனால், கோடை காலத்தில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்று விடுகிறது.
இப்பகுதிகளில் பொதுக் கிணறுகள் அதிகம் உள்ளன. தூர்ந்த நிலையில் இருக்கும் இந்தக் கிணறுகளை தூர்வாரினால் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். குறிப்பாக, அஸ்தினாபுரம் - சிட்லபாக்கம் இடையே வெங்கட்ராமன் நகர் முதல் பிரதான சாலை, அரிதாஸ்புரம் பிரதான சாலை, சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகர், மகாலட்சுமி நகர் என 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக் கிணறுகள் இருந்தன. இவற்றில் வெங்கட்ராமன் நகர் முதல் பிரதான சாலை, முத்துலட்சுமி நகரில் உள்ள கிணறுகள் மட்டுமே தற்போது உள்ளன. மற்றவை மூடப்பட்டு விட்டன.
மேலும் செம்பாக்கம் ஏரி பகுதியிலும் சில கிணறுகள் இருந் துள்ளன. அவற்றை இப்போது காணவில்லை. சர்வமங்களா நகர் பகுதியை ஒட்டிய செம்பாக்கம் ஏரியில் பல்லாவரம் நகராட்சியால் தோண்டப்பட்ட கிணறு மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூர்ந்துபோன கிணறு களையும், கோயில் குளங்களை யும் தூர்வாரி, நீர் வரத்துப் பகுதிகளை சீரமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக குரோம் பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானம் கூறும்போது, ‘‘குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட பொதுக் கிணறுகள் இருந்துள்ளன. இவற் றில் பல கிணறுகள் தூர்ந்துவிட்டன. இக்கிணறுகளை தூர்வாரி அவற்றுக்கான நீர்வரத்தை உறுதி செய்ய வேண்டும். மழை நீரை சேகரிக்கும் அமைப்பாகவும் கிணறுகளை மாற்றலாம்’’ என்றார்.
தமிழக நீர்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 1998-ம் ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை உணர்ந்துதான், 2002-03-ல், மழைநீர் சேமிப்பை கட்டாயப்படுத்தி, தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் கட்டிடங்களுக் கான இறுதிச்சான்று அளிக்கப்படும் என்றதால், நிலமேல் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
அதன்பிறகு இதை யாரும் சரியாக செய்யவில்லை. அதே நேரம் வீடுகளிலோ, அடுக்குமாடி குடியிருப்புகளிலோ கிணறுகள் இருந்தால் அவற்றை தூர்வாரி பயன்படுத்தினால், நிலத்தடி நீரை வெகுவாக பாதுகாக்கலாம். பொதுக்கிணறுகள் இருந்தால், அவற்றை தூர்வாரி முறையாக பயன்படுத்தினால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.