டெங்கு உள்பட மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2 மாத காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் சென்னையில் மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கிறார். இது மிகவும் வேதனைக்குரியது. டெங்கு உள்பட மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
குறிப்பாக கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கும், கொசு மருந்துகளை தெளித்தும் தெருக்களையும், சாலை ஓரப் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்பட அனைத்துக் கிராமப்புற பகுதிகளிலும் அரசு நிர்வாகிகள் துரித நடவடிக்கை எடுத்து சுத்தம், சுகாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும்.
ஆரம்ப சுகாதாரம் நிலையம் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்கள் பணியில் இருப்பதையும் மருந்து, மாத்திரைகள், பரிசோதனை மையம் தேவையான அளவில் இருப்பதையும் தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தனியார் மருத்துவமனைகளிலும் இது போன்ற நோய் தீர்ப்பதற்கான மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தற்போது மழைக்காலமாக இருப்பதால் உடனடியாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மர்மக் காய்ச்சல், வைரஸ், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்தி, உயிரிழப்பை தடுத்து, பொதுமக்கள் நலன் காக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.