சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி தினேஷ் (29), தாமரை (27) ஆகியோர் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்று சென்றனர். இயற்கை அழகை ரசித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, புதரில் மறைந்திருந்த காட்டெருமை தாக்கியதில் தாமரை பலத்த காயமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தினேஷையும் காட்டெருமை தாக்கியது. பூங்கா ஊழியர்கள் காட்டெருமையை விரட்டி விட்டு, காயமடைந்த தம்பதியை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்குப் பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து வடக்கு வனக்கோட்ட வன அலுவலர் கலாநிதி, வனச்சரகர் பெரியசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.